சென்னை: ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலோடு பல்வேறு வழிகாட்டுதல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், இன்று வரை இதை முழுமையான கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது சவாலாகத்தான் உள்ளது. இதற்கு இடையேதான் சென்னையில் வெறி நாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 5 ரேபிஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.
இருந்தபோதிலும், பலருக்குச் சந்தேகம் எழலாம்.. ரேபிஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் போதுமானதா? ரேபிஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? என. ஆம் ரேபிஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் 100 சதவீதம் ரேபிஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வேகமாகப் பரவும் இன்புளூயன்சா ஃபுளூ.. இணை நோய் உள்ளவர்களுக்கு அதிக கவனம் தேவை.!
மேலும் வெறி நாயோ அல்லது சாதாரண நாயோ எதுவாக இருந்தாலும் சரி நாய் கடித்தால் உடனடியாக காயம் பட்ட இடத்தை சோப்பால் நன்றாகக் கழுவி விட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதே பரிந்துரை. மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு தடுப்பூசி எத்தனை டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவார்.
ரேபிஸ் ஊசி குறிப்பிட்ட டோஸ் போடாமல் விட்டால் என்ன ஆகும்? நீங்கள் நாய் கடியாலோ அல்லது பூனை உள்ளிட்ட வேறு விலங்குகளின் கடிக்கோ பாதிக்கப்பட்டு ரேபிஸ் ஊசி போடப் பரிந்துரைக்கப்பட்டால், எத்தனை டோஸ் ஊசிகள் போட வேண்டும் எனவும் எந்தெந்த கால இடைவெளியில் போட வேண்டும் என்றும் மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ.. அதைச் சரியாகக் கவனத்தில் வைத்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் காலப்போக்கில் ரேபிஸ் நோய் வர வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ரேபிஸ் மிகவும் கொடிய வைரஸ் என்பதை மக்கள் புரிந்துகொண்டு ரேபிஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளித்துச் சரியாக டோஸ்களை போட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், நாய் கடித்து ரேபிஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பின் உணவில் கட்டுப்பாடு உள்ளதா என்றால், கட்டாயம் உணவில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக அனைத்து உணவுகளையும் உட்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக நாயிலிருந்து மட்டும்தான் ரேபிஸ் நோய் பரவுகிறதா என்றால் அது கிடையாது. வீட்டில் வளர்க்கும் பூனை, குரங்கு உள்ளிட்ட அனைத்தில் இருந்தும் ரேபிஸ் பரவும். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை நாய் காரணமாகத்தான் அதிகம் ரேபிஸ் பரவுகிறது எனவும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் நம்மில் பலர் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் உள்ளிட்ட விலங்குகளை மிகச் செல்லமாக வளர்க்கும் நிலையில் அவைகள் வறண்டினாலோ, சிறிதாகக் காயம் ஏற்படும் வகையில் கடித்தாலோ அதைக் கண்டுகொள்வது இல்லை.
ஆனால், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியாக இருந்தாலும் அது விலங்கு என்பதை உணர்ந்து உடனடியாக ரேபிஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்குக்கும் முறையாகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதுடன், கருத்தடையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சிறந்த ஆரோக்கியம் என்றால் என்ன? உடல் மற்றும் மனம் மட்டும் தொடர்புடையதா?