அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட வக்காரமாரி கிராமத்தில் உள்ள காலனி தெருவில் உள்ளவர்கள் மயானத்திற்கு செல்ல பழைய, புதிய என இரண்டு வாய்க்கால்களை கடந்து செல்ல வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பொன்னாற்று வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்து வக்காரமாரி கிராமத்தின் வழியாக செல்லும் பழைய, புதிய வாய்க்களில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது.
இந்நிலையில் வக்காரமாரி காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதனால் அவருடைய உடலை அடக்கம் செய்ய அப்பகுதியினர் தண்ணீரில் மூழ்கியபடி மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்த செய்தி செய்திதாள்களில் வெளியானது. இதனடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
இதில் மாநிலம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு எத்தனை மயானங்கள் உள்ளன? அவர்கள் உடலை அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் போதுமான இடம் வழங்கப்பட்டுள்ளதா? இல்லையா? அதுபோல் மயானத்திற்கு செல்ல போதுமான சாலை வசதிகள் உள்ளனவா என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக 32 மாவட்ட ஆட்சியர்களும் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் வழக்கை ஒத்தி வைத்தார்.