பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது, வேலைவாய்ப்பை பற்றி அறிந்து கொள்ளுதல், அணுகுமுறை பற்றி இந்தச் செய்தி தொகுப்பு விளக்குகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குநர் தியாகராஜன், பொறியியல் வேலை வாய்ப்புகள், தயார்படுத்திக்கொள்ளுதல் பற்றி நம்மிடையே விளக்கியுள்ளார்.
அதில், "பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை மாநில அளவில் ஏற்படுத்தித் தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில் ஏப்ரல், மே மாதங்களிலேயே அதற்கான பணிகள் தொடங்கப்படுகிறது.
கல்லூரிகளில் நடத்தப்படும் வளாக முகாம்களுக்காக நடப்பாண்டில் 400 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம் மாணவர்கள் வளாக வேலைவாய்ப்பு தேர்விற்கு எவ்வாறு தங்களை தயார் செய்து கொள்வது என்பது குறித்தும் பயிற்சி கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்தாண்டு 876 மாணவர்கள் வளாகத் தேர்வின் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 600 பேர் வேலைவாய்ப்பினை பெற்றிருந்தனர்.
பொறியியல் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறையவில்லை. நிறுவனங்கள் வேலைக்கு ஆள்களை தேர்வு செய்யும் முறையை மாற்றியுள்ளனர். முன்னர் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்து பணியில் அமர்த்தினர். ஆனால் தற்பொழுது பயிற்சி பெற்ற மாணவர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர்.
மாணவர்களுக்கான பயிற்சி அளிப்பதற்கு கல்லூரிகளிலும் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகிறது. மாணவர்கள் நேர்காணலுக்குச் செல்லும்பொழுது அவர்கள் பங்குபெற்ற போட்டிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்கள் எந்தத் தேர்விலும் தோல்வியடையாமல், குறைந்தபட்சம் 70 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் அவர்களுக்கான அடிப்படை பாடத்தில் நல்ல அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.