சென்னை புழல் அடுத்த விநாயக புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில், ஊட்டி ஏரியை சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் (40) என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கோரியும், சீனிவாசன் மறுத்ததால் காவல் துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று (ஆகஸ்ட் 1) மாலை புழல் காவல் ஆய்வாளர் பென் சாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. பின்னர் மறுநாள் அதாவது இன்று (ஆகஸ்ட் 2) காலை காவல் நிலையம் வர வேண்டுமென அறிவுறுத்திவிட்டு பென் சாம் சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த சீனிவாசன், மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சீனிவாசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற சீனிவாசன் 86 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே வீட்டு உரிமையாளர் காவல் துறையினரை அழைத்து வந்து தம்மை அடித்ததால் தற்கொலை செய்து கொல்ல முயற்சித்தேன் என சீனிவாசன் வாக்குமூலம் அளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே சீனிவாசன் வீட்டிற்கு வாடகை தராததாலும், மதுபோதையில் வந்து தகராறு செய்து வருவதாலும் தான் ஜனவரி மாதம் முதலே அவரை வீட்டை விட்டு காலி செய்ய கூறினேன். ஆனால் அவர் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சைதாப்பேட்டை 9ஆவது அமர்வு குற்றவியல் நீதிபதி மோகனாம்மாள் சீனிவாசனிடம் வாக்குமூலம் பெற்றார். மேலும் 86 விழுக்காடு உடல் கருகிய நிலையில் சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 2) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். சீனிவாசன் வாக்குமூலம் அளித்த நிலையில் புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டு வாடகை பிரச்னையால் ஒருவர் தீக்குளிப்பு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!