சென்னை: வடபழனி ஒட்டகபாளையம் பகுதியை சேர்ந்த வேலுமணி, அதே பகுதியில் வைத்தியசாலை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம் இந்த வைத்தியசாலை மையத்தில் சிகிச்சை பெற்று சென்ற கார்த்திக் என்பவர், ஒழுங்காக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி வைத்தியச்சாலை மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜ் இந்த வழக்கை விசாரித்து முடித்து வைத்தார். பின்னர் அந்த காவல் ஆய்வாளர் பணியிட மாறுதலாகி சென்றுள்ளார்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற வடபழனி காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு பழைய வழக்கை முடித்து வைக்க 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், முதல் தவணையாக 50 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றதாக கூறி வேலுமணி நேற்று(நவ.25) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு தன்னை தொடர்பு கொண்டு, கார்த்திக் கொடுத்த வழக்கை முடித்துவைக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதற்கு தான் எந்த விதமான குற்றமும் செய்யவில்லை என தெரிவித்ததற்கு, காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக திட்டி சென்றதாக தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு மீண்டும் தன்னை தொடர்பு கொண்டு 50 ஆயிரம் ரூபாயை கொடுக்குமாறு மிரட்டியதாகவும், வேறு வழியின்றி தனது வைத்திய சாலைக்கு வந்த காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபுவின் கார் ஓட்டுனர் திருமலை என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வேறு வழியின்றி மனித உரிமை ஆணையம் மற்றும் இணை ஆணையரிடம், காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு நடவடிக்கை எடுக்க புகார் அளித்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் நேற்று தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகாருடன் தன்னிடம் காவல் ஆய்வாளரின் ஓட்டுனர் திருமலை 50 ஆயிரம் பணம் வாங்கி செல்லும் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் இணைத்திருப்பதாக அவர் கூறினார்.
இது குறித்து உயரதிகாரி ஒருவரிடம் கேட்டப்போது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அஜய் என்ற இளைஞர் வேலுமணி வைத்தியசாலையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக்கூறி புகார் கொடுத்ததால் விசாரணை நடைபெற்றது. இதே போல பல புகார்கள் இவரது வைத்தியசாலை மீது வந்துள்ளது. இதனால் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் இவரது வைத்தியசாலையில் சோதனை மேற்கொண்டு சென்றனர். இதற்காக பழிவாங்குவதற்காக சிவசாமி, காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு மீது பொய்யான புகார் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் சிசிடிவியில் பணம் வாங்கியதாக கூறப்படும் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபுவின் ஓட்டுனர் காவலர் திருமலை வேலுமணியின் நண்பர் எனவும், தீபாவளி பண்டிகைக்காக அவர் வேலுமணியிடம் 50 ஆயிரம் கடன் வாங்கும் போது எடுக்கப்பட்ட சிசிடிவி என அவர் மறுப்பு தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் உயரதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 6.5 கோடி சுருட்டிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி