சென்னை: தமிழ்நாட்டின் உயர் கல்விச் சிறப்பு குறித்த செவ்வரங்கம், சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தேசிய தரவரிசையில் சிறப்பான இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கெளரவித்தார்.
இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், சென்னை ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேசிய அளவிலான தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 11 இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார். இதில் சென்னை ஐஐடி, அம்ரிதா விஸ்வ வித்யா பீடம், கோவை விஐடி, வேலூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி, சிஎம்சி மருத்துவக்கல்லூரி வேலூர்,
சென்னை மாநிலக் கல்லூரி, லயோலா கல்லூரி, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சவீதா மருத்துவக்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, SRM அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி, JSS பார்மசி கல்லூரி உதகமண்டலம் ஆகியவை தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெற்றதற்காக பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தனியாருடன் செயல்பட அரசு முன்வர வேண்டும்: இதனைத்தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். இதன் மூலம் தமிழ்நாட்டின் பெயரை வெளியில் கொண்டு வந்துள்ளீர்கள். முதல் 20 இடங்களை எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கும் வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. தரவரிசையில் இடம்பிடித்தவை, இடம்பிடிக்காதவை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். தரத்தை மேம்படுத்த வேண்டும். தரவரிசையில் முதலிடம் பிடித்தால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். மிகச்சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் சிறந்த அடையாளம், பெருமையைப் பெற்றுள்ளது சென்னை ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்.
சென்னை ஐ.ஐ.டி உடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும். சிறந்த கருத்துரு, யோசனைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
அதன்மூலம் ஒன்றிணைந்த வளர்ச்சியைப் பெற முடியும். தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல நல்ல விஷயங்கள் மேலோங்கியுள்ளன. அவற்றை பின்பற்றலாம். தனியாருடன் இணைந்து செயல்பட அரசு முன்வர வேண்டும்” என பேசினார்.
ஆளுநரின் தமிழ் ஆர்வம்: இதனையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி இது. மத்திய அரசின் சர்வே அடிப்படையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 53 சதவீதமாக இருக்கிறது. எண்ணிக்கையில் மட்டுமல்ல, உயர்கல்வியின் தரத்திலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் வர வேண்டும்.
1,000 இடங்களில் 163 உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையே இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி தரத்தில் தமிழ்நாடே முதலிடம். தமிழ்நாட்டுக்குப் பின்னால்தான் டெல்லி இருக்கிறது.
தமிழ்நாட்டின் தரத்தை மேலும் உயர்த்தவே ஆளுநர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 42,000 கோடியை கல்விக்காக மட்டுமே ஒதுக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். பெண் கல்வியை மேம்படுத்த மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வெகுவிரைவில் தமிழில் நன்றாக பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார், ஆளுநர்.
இதிலிருந்தே தமிழ் மீதான ஆளுநரின் ஆர்வம் தெரிகிறது. எல்லாரும் வளர வேண்டும். எல்லாருக்கும் கல்வி போய் சேர வேண்டும். சிறப்பான கல்வியாக அது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தரவரிசையில் முதல் 11 இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களைப் பார்த்து, பிற உயர்கல்வி நிறுவனங்களும் தரத்தில் தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அரசும், தனியாரும் போட்டி போட்டுக்கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்” என கூறினார்.
தமிழ்நாடு முதலிடம்: தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தேசிய தரவரிசையில் சிறப்பான இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு வாழ்த்துகள். முதலமைச்சர் படித்த மாநிலக் கல்லூரியும் தேசிய தரவரிசையில் இடம் பிடித்துள்ளது. இதுவே தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்புக்கு சான்றாக அமைந்துள்ளது.
மாநிலக் கல்லூரியை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டிக்கு பாராட்டுகளை தெரிவிக்கின்றோம். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் அமைப்பாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி திகழ்கிறது.
நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளது. வேலூர் CMC, சென்னை சவீதா, SRM ஆகியவை சிறப்பான இடங்களை பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த கல்வி கட்டமைப்பை பெற்றுள்ள நிறுவனமாக SRM திகழ்கிறது. தேசிய தரவரிசையில் 12 வது இடத்தில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி இடம் பெற்றுள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், முதல் 10 இடங்களுக்காக சென்னை மருந்துவக்கல்லூரியும் இடம்பெறும். அதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தித் தரும். வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் World Economic Forum நடத்தும் மாநாடு நடைபெற உள்ளது. அதில் இந்தியாவின் பிரதிநிதியாக நான் செல்லும் போது நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எனக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், நல்லாட்சியின் புகழ், வரும் ஜனவரியில் உலகளாவிய புகழை அடைய உள்ளது. இந்தியாவிலேயே அதிகளவில் 70 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதன் மூலம் 10,000 மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் அரசாக இருந்தாலும் சரி, அவர்களை பாராட்டும் ஆளுநராக இருந்தாலும் சரி, அனைத்திலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ஆளுநர் நடத்தும் உயர்கல்வி மாநாடு!