சென்னை தலைமைச் செயலகக் காலனியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் பத்மநாபன். இவர் கடந்த 8ஆம் தேதியன்று தனது ஆட்டோவில் தவறவிட்டுச் சென்ற சூட்கேசை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனைப் பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப்பணம், அழகு சாதனப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்தப் பணம் ராஜஸ்தான் மாநிலம் பின்மால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழுவூரைச் சேர்ந்த நீத்து என்ற பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. சென்னை வந்த நீத்து தனது உறவினர்களை சந்தித்துவிட்டு பெங்களூரு செல்வதற்காக ரயில் நிலையம் செல்ல செப்டம்பர் 8ஆம் தேதி ஆட்டோவில் பயணித்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் கொண்டுவந்த சூட்கேஸை ஆட்டோவிலேயே மறந்துவிட்டு பெங்களூரு சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சூட்கேஸ் காணாமல்போனதை தனது உறவினர்கள் மூலம் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள், ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப்பணம், அழகு சாதனப் பொருட்களை நீத்துவின் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும், சூட்கேசை பத்திரமாகக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபனின் நேர்மையை காவலர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.