சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று(ஜூன்10) இரவு சென்னை வந்த அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டது சர்சையானது.
இதனால், மாநில அரசு திட்டமிட்டு மின் தடை ஏற்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அமித்ஷாவை, கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த முக்கிய பிரபலங்கள் சந்தித்தனர்.
இன்று (ஜூன்11) சென்னை கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "தமிழ்நாட்டிலிருந்து காமராஜர், மூப்பனார் ஆகிய 2 பேர் பிரதமராவதை இழந்துள்ளோம். இரண்டு முறை பிரதமர்களை தவறவிடுவதற்கு காரணம் திமுகதான். வருங்காலங்களில் ஒரு தமிழனை பிரதமராக்குவதற்கு உறுதி எடுப்போம். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 60 சதவீதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 40 சதவீதம் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியை வெற்றிபெற பாஜக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பாஜக நிர்வாகி இருக்க வேண்டும். அந்த வகையில் பூத் கமிட்டியை தொடர்ந்து பேஜ் (page)கமிட்டி அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சென்னை விமானநிலையம் அருகே சாலையில் இறங்கி நடந்த போது மின்தடை ஏற்பட்டது எனக்கு புதிதல்ல. மின்தடை ஏற்பட்டது தமிழ்நாடு இருளில்தான் உள்ளது என்பதை காட்டுகிறது. இருளில் உள்ள தமிழ்நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்” என கூறினார்.
இதனையடுத்து, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்லும் அமித்ஷா, பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு பாஜகவின் 9ஆண்டு கால சாதனையை விளக்கும் விதமாக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தை நிறைவு செய்யும் அமித்ஷா மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்கிறார்.
இதையும் படிங்க: மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா: கனிமொழி பேச்சு