தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக உடற்பயிற்சி கூடம், பூங்கா, கடற்கரை சாலைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இதனால் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள் எனப் பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
அதிகரிக்கும் உடல் எடை
வீடுகளில் மக்கள் முடங்கி கிடப்பதால் உடல் எடை, சோம்பல் தன்மை போன்றவை அதிகம் ஆகிவிட்டது. அதிகரிக்கும் உடல் எடை, சோம்பல் தன்மையால் உடலுக்கு மிகவும் ஆபத்து என உடற்பயிற்சி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அர்ஜூனா விருதுபெற்ற உடற்பயிற்சி வல்லுநர் பாஸ்கரன் கூறுகையில்,"தினமும் உடற்பயிற்சி கூடங்களில் சென்று பயிற்சி செய்பவர்கள் இந்த ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடக்கி இருக்கின்றனர்.
வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்
காலை, மாலையில் 45 நிமிடங்கள், நடைபயிற்சி, 30 நிமிடங்கள் சிறு சிறு உடற்பயிற்சி, ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சாப்பிட்ட உணவுகளும் செரிக்கும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடல் தயார்செய்யும். பெண்கள் மற்றும் நீரழிவு நோய் உடையவர்கள் உடற்பயிற்சியை வீட்டின் மொட்டை மாடி அல்லது வீடுகளுக்குள்ளேயே செய்வது மிகவும் முக்கியமானது.
உணவுக்கு தேவை கட்டுப்பாடு
அதிகமாக எண்ணெய் உள்ள உணவு பொருள்கள் சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தக் கால கட்டத்தில் காலை, மதியம் அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இரவு நேரங்களில் உணவு எவ்வளவு குறைவாக எடுத்துக்கொள்கிறோமா அவ்வளவு நல்லது. உணவுடன் காய்கறிகள், கீரை வகை அதிகம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...
கரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவரை அதிகம் தாக்கும், இதனால் முட்டை வெள்ளை கரு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். காலை, மதியம் இரண்டு முட்டை இரவில் ஒரு முட்டை வெள்ளை கரு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடலுக்கு எந்தத் தீங்கும் வராது.
இந்த நேரத்தில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் காலை, மாலை உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானவை. காலையும், மாலையும் சூரிய ஒளி உடலின்மீது படுவதால் வைட்டமின் டி (Vitamin D) அதிகரிக்கும் இதனால் கரோனா நோய் வராமல் தடுக்கலாம்.
இந்தக் காலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள, மத்திய, மாநில சுகாதாரத் துறைக்கும் தமிழ்நாடு அமைசூர் பாடி பில்டிங் மற்றும் தமிழ்நாடு அனைத்து உடற்பயிற்சி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரும் தனித்து இருப்போம், விழித்து இருப்போம், தாய் நாட்டை காப்போம்" என்றார்.
இதையும் படிங்க:சுவரின் மேல் கால் வைத்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் பூஜா