சென்னை: தொடர்ந்து இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் தென் தமிழ்நாடு பகுதிகள் கடும் சேதத்தைச் சந்தித்து வருகிறது. வெள்ள நிவாரணப் பணிகளும், மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவடத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(டிச.20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் அதி கனமழை பதிவான நிலையில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. தொடர் கனமழையினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், தமிழ்நாடு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் துரிதமாகச் செயல்பட்டு பாதிக்கப்பட்டோரை விரைந்து மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டது. முன்னதாக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பாதிப்படைந்த பகுதிகளில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து, மழை குறைந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிச.20) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, நாளை (டிச.20) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். தற்போது தென்காசி மாவட்டத்திலும் வெள்ள மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை(டிச.20) ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் நாளை(டிச.20) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ளம்..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய எடப்பாடி பழனிசாமி!