சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு ஜூலை 28ஆம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்காணும் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளன்று ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 27ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா- கிராண்ட் மாஸ்டர், சியாம் சுந்தரிடம் ஜோதி ஒப்படைப்பு