சென்னை : கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர்.செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ”தமிழ்நாட்டில் சிமெண்ட் விலையேற்றம் சமீபகாலமாக உயர்ந்துள்ளதால், கரோனா ஊரடங்கு காலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டு சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி, விலையை உயர்த்தி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ சார்பில் தாக்கல் செய்யபட்ட பதில் மனுவில், சிமெண்ட் விலை உயர்வு குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு அதிகார வரம்பு இல்லை என்பதால் புகாரை தமிழ்நாடு டிஜிபிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, சிமெண்ட் விலை உயர்வு குறித்து விசாரணை நடத்தி நான்கு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?