சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்றும் அவருடைய பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.1.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று (மே 28) மாலை அச்சிலை திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே உலோகத்தினால் செய்யப்பட்ட மிக உயரமான சிலை கருணாநிதியின் சிலை தான். சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றன. சிற்பி தீனதயாளன் இந்தச் சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்தச் சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது. கருணாநிதி சிலைக்கு கீழே இடம் பெற்றுள்ள வாசகங்கள் குறித்து கீழே காணலாம்,
- அண்ணா வழியில் அயராது உழைப்போம
- ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்.
- மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
- வன்முறையை அழித்து வறுமை ஒழிப்போம்.
- இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருணாநிதியின் சிலையை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் முதல் சிலைமுதல் தற்போது வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கருணாநிதியை சிலையை வடிவமைத்தவர் இவர் தான்.
அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியை தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக உட்கட்சி தேர்தல்: எச்சரித்த ஸ்டாலின்...!