சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 14 ஆம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (ஏப்ரல்.18) மீண்டும் தொடங்கியது.
சட்டப்பேரவையில் எட்டாம் நாளான இன்று (ஏப்ரல்.19) தொழில்துறை, கனிம வளத்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இந்நிலையில் பேரவையில் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய உதகமண்டலம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், குந்தா வட்டம் மஞ்சூரில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "மாணவர்கள் தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதனால் பல பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைவாக நிரம்பியுள்ளது என்றார். உதகமண்டலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 750 இடங்களில் 265 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 455 இடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1 67,000 மொத்த இடங்களில் 1,10,215 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் முதல்வன் திட்டம்... 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கம்...