சென்னை: நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை புள்ளியியல், பொது நிர்வாகம், வணிகவியல் பிரிவில் கணக்கியல் மற்றும் நிதி ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் பொன்முடி , மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஜன.5) தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாட்டில் 10 புதிய கல்லூரிகளைத் தொடங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்து வருகிறது. நான் பயின்ற 'பொது நிர்வாகம்' படிப்பு இங்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகள் பாடம் நடத்திய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் படிக்கும்போது கற்றுக் கொண்டதைவிட பேராசிரியராக இருந்தபோதுதான் அதிகம் படித்தேன்.
கல்லூரி மாணவர்களுக்கான உயர் கல்வி பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு (Study leave) விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதனைப் பயன்படுத்தி நன்றாகப் படித்து நேரடித் தேர்வு எழுத தயாராகிக் கொள்ள வேண்டும். ஆன்லைன் தேர்வு முறை தரமானதாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். நேரடித் தேர்வு முறைதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நன்றாக இருக்கும். கரோனாவால் கல்வித்துறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தொடர்ந்து படித்து தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கும். ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால்தான், மாணவர்களுக்கு கல்வி முறையாகப் போய் சேரும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை பாதிப்பு - 78% கால்நடைகளுக்கு கோமாரி நோய்!