கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்காரணமாக கல்லூரி, பல்கலைக்கழங்களில் நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து, தனியார் கல்லூரிகள் பல தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கல்லூரித் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் எனவும்; முதலாம், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உள் மதிப்பெண்களை (Internal Mark) கொண்டு, பருவத் தேர்வுகளுக்கு மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.