சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் எந்தப்படிப்பினை தேர்வு செய்யலாம் என்பது குறித்த ஆன்லைன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (ஏப்.18) முதல் வருகின்ற 23ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள தகவலில், "அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு மார்ச் 1ஆம் தேதி 'நான் முதல்வன்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏப்ரல் 18 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஏப்ரல் 18, 22 ஆகிய தேதிகளிலும், ஏப்ரல் 19, 23 ஆகிய தேதிகளில் கலை, வணிகம் உட்பட பிற பிரிவு மாணவர்களுக்கும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இந்த அமர்வுகளில் மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் உயர்கல்வியில் சேர்வதன் முக்கியத்துவம், நுழைவுத் தேர்வுகள் பற்றி துறை சார்ந்த வல்லுநர்கள் எடுத்துரைக்க உள்ளனர். மேலும், எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்த படிப்புகளில் தேர்ந்தெடுப்பது மற்றும் உதவித்தொகை, வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு இரண்டு மணிநேர அமர்வுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த அமர்வுகளில் இணையதளம் மூலம் நேரலை செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியை ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம்