சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளி அளவில் அமைக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டல் குழு மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய, எழுதாத, இடைநின்ற, தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்தக் குழுவின் மூலம் உயர் கல்விக்கு மாணவர்களை தயார் செய்வதும், விண்ணப்பிக்கச் செய்வதும் உயர் கல்வி வழிகாட்டல் குழுவின் முக்கிய பணியாக உள்ளது.
மேலும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ள கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வு விவரங்களை கூறுவதும், முதன்மைக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது மற்றும் திறன் வளர்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவினை உருவாக்கி, மே 6ஆம் தேதி முதல் தினசரி வழங்கப்பட உள்ள பயிற்சிகள், கல்லூரிக் கனவு குறித்த தகவல்கள் மற்றும் கல்லூரி சேர்க்கை விவரங்களை அனுப்ப வேண்டும். மாணவர்களின் விண்ணப்பப் படிவங்களை நிரப்பி, அவர்கள் உயர் கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த அன்று மாலை 4 மணிக்குள் தோல்வி அடைந்த மாணவர்களை அழைத்து பேசி, ஆலோசனை கூறி அவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் எந்தெந்த கல்லூரியில் சேர வாய்ப்புள்ளது என்பதையும், விண்ணப்பம் செய்து விட்டதையும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அரசு கல்லூரியிலோ, அரசு ஒதுக்கீட்டிலோ சேரும்போது கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது. மேலும், குறைவான கட்டணம்தான் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.
‘புதுமைப் பெண் திட்டம்’ மாணவிகளின் உயர் கல்விக்கு முக்கிய திட்டமாக உள்ளதால், மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளுக்கு 100க்கு 100 உயர் கல்வியில் சேர்க்க வேண்டும். சில பெற்றோர்கள் திருமணம் குறித்து கவலை தெரிவித்தாலும், 18 வயது நிரம்பிய உடன் திருமணம் செய்து விட்டு கல்லூரிக்கு அனுப்பலாம் என்பதை எடுத்துக் கூறி சேர்க்கைக்கு அனுமதிக்க வைக்க வேண்டும்.
மாணவர்களின் பெற்றோர்களிடம் உயர் கல்விக்கான வாய்ப்புகள் மற்றும் வழங்கப்படும் உதவித் தொகைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். மாணவர்களை சிறந்த கல்லூரியில், சிறந்த பாடத்தில் சேர்க்கும் வகையில் பல கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து விட்டதை உறுதி செய்த பின்னர், கல்விக் கடனுக்கும் ஏற்பாடு செய்து தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Mann Ki Baat : 100வது எபிசோடில் பிரதமர் மோடி உரை - தமிழ்ப் பெண்களை நினைவுகூர்ந்த மோடி!