சென்னை: காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராகப் புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 'காவல் துறை சீர்த்திருத்தச் சட்டம்' கொண்டு வரப்பட்டது.
அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராகப் புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் உள்துறைச் செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியினைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அலுவலர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக்கோரி வழக்கறிஞர் சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழ்நாடு காவலர் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில மற்றும் மாவட்ட அளவில் காவல் புகார் ஆணையம் அமைக்கப்பட்டன; சட்டம் இயற்றப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருவதால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையங்கள் அமைக்கப்படவில்லை என்பதால் உயர் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தலையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிடலாம் என்றாலும், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தற்போதும் கண்காணித்து வருவதாலும்,
ஆணையம் அமைத்தது குறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது, என தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையங்கள் அமைக்கப்படாதது குறித்து, உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரர்களுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இரு வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: "ஓபிஎஸ் பொது மன்னிப்பு கேட்டார்”... ”அதிமுகவில் இரட்டை தலைமை பதவிகள் காலாவதி” - சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி