சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது;.
கரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது. இந்த வைரசை குறைத்து மதிப்பிட்டதால்தான், பல வளர்ந்த நாடுகள் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நடமாட்டமும், தொடர்பும் தான் இந்த வைரஸ் பரவக் காரணம். கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பது தான் விவேகமானது என்பது சாணக்கியரின் கூற்றாகும். லட்சுமண ரேகையை வரைந்து அதற்குள் அடைப்பட்டுக் கிடப்பதே அறிவுடையச் செயலாகும்.
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம். வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கரோனா வைரசின் வீரியத்தை அதிகரிக்கிறோம். தனித்திருந்து பேரழிவைத் தடுக்க வேண்டும். தனித்திருப்பதைப் பாதுகாப்புக்கான பயிற்சி வாய்ப்பாக கருத வேண்டும்.
மேலும் மனதை அடக்கி வெற்றி காண்பதற்கு, வேறெந்த வெற்றியும் ஈடாகாது. கரோனாவுக்கு எதிரானபோரில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும், இனி வரும் காலங்கள் கடினமாகவே இருக்கும். கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பாதி முடிந்துள்ளதாக, விஞ்ஞானிகள் கூறினாலும் மருந்து கண்டுபிடிப்பது என்பது இன்னும் சந்தேகமாகத் தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வாரியர்ஸ்க்கு ஒரு கோடி அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்!