சென்னை: ட்விட்டரில் கவிஞர் லீனா மணிமேகலை திரைப்பட இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக மீடூ (Me Too) புகார் தெரிவித்ததை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புகழுக்கு களங்கம்
அதில், தன் பெயருக்கும் புகழுக்கும், களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி பொய்யான புகாரை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளதாகவும், சுய விளம்பரத்திற்காக தவறான தகவலை பரப்பி உள்ளதாகவும், எனவே இந்திய தண்டனை சட்டம் அவதூறு பிரிவின் கீழ் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லீனா மணிமேகலை வழக்கு
இந்த வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை 9ஆவது நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையில் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து லீனா மணிமேகலை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பாஸ்போர்ட் முடக்கத்தை நீக்கியதால், உச்ச நீதிமன்றத்தில் சுசி கணேசன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 மாதத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சைதாப்பேட்டை 9ஆவது நீதிபதி மோகனாம்பாள் இந்த வழக்கை விசாரிக்க கூடாது, வேறு நீதிபதி வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார்.
லீனா மணிமேகலை வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கு விசாரணையின்போது, இயக்குநர் சுசி கணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர், "கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வழக்கு விசாரணையை மேலும் காலதாமதம் செய்து தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோல் வழக்கை லீனா மணிமேகலை தொடர்ந்துள்ளார். எனவே, அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். மேலும், உச்ச நீதிமன்றம் அவதூறு வழக்கை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளதாகவும் வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து லீனா மணிமேகலையின் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு