சென்னை உயர்நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏழுபேர் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய முடிவெடுத்த பின்னர் தாமதம் ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ஆகையால் மீண்டும் ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.