கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர் புறப்பட்டுச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குடி கணேசன், "இங்கே பணியாற்றி சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.
எந்தத் தொழிலாளியும் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படக்கூடாது. அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவுவதற்காக சென்னையில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், மாநில அளவிலான கட்டுப்பாட்டு எண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு அலுவலர்கள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல மாவட்ட அளவிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கட்டுப்பாட்டு எண் அமைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகளைப் பெற 044 24321408, 044 24321438 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மேலும், மாவட்டங்களில் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநகராட்சி சார்பாக தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதற்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் மீது பாகுபாடு காட்டாமல், இங்குள்ள தொழிலாளர்கள்போல அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
தொடர்ந்து இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுமானத்துறை, பேப்பர் தொழிற்சாலை, மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொழில் நடைபெற்று வருகிறது. கட்டுமானத் தொழிலாளர்கள் 13 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 27 லட்சத்து 42 ஆயிரத்து 97 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்யும்” என்றார்.