கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்து வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 2007-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ஓராண்டுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்த போதும், அதை அமல்படுத்த 12 ஆண்டுகள் ஆனது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஹெல்மெட் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து உள்துறை செயலாளரும், ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாதது பற்றி சுகாதார துறை செயலாளரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மாவட்ட வாரியாக ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம், பலியானவர்களின் விவரங்களையும் சமர்ப்பிக்க தமிழ்நாடு டிஜிபிக்கும் உத்தரவிடப்பட்டது. ஹெல்மெட் வழக்கு தொடர்பான இந்த விவரங்களை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தவிர்க்க இந்த உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி, இவ்வழக்கு விசாரணையை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.