சென்னை: தமிழ்நாட்டில் கடந்தாண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்தன. அதில் 14 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு சாலை விபத்துகளை குறைப்பதற்காக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு முயற்சியாக சென்னை எழும்பூர் காவலர் அருங்காட்சியகத்தில் சாலை விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (மார்ச் 05) நடந்தது.
அப்போது, குழந்தைகள் பெற்றோர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். சாலை விபத்துகள் தொடர்பாக பள்ளி மாணவர்கள் செய்த கலை நிகழ்ச்சிகளை கண்டனர். இதனையடுத்து நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களிடம் உரையாடும்போது, சாலை விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்றால் எந்தமாதிரியான விளைவுகள் ஏற்படும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சந்தோஷ் என்னும் மாணவர், வாழ்க்கையே பறிபோகிடும் என பதிலளித்தார். அதற்கு 'நான் உன் ரசிகன்' என்று டிஜிபி சைலேந்திரபாபு அந்த மாணவனிடம் தெரிவித்து பரிசு வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி, “பள்ளி மாணவ, மாணவிகளிடையே போக்குவரத்து, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறப்பான ஒன்று.
சாலை விபத்துகள் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் உயிர்போக தலைக்கவசம் அணியாமல் இருப்பது மட்டுமே முக்கிய காரணம். தலைக்கவசம் அணிவதன் மூலம் பெரும்பாலான உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை தடுக்க 952 இருசக்கர வாகன ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளுக்கு 100 இருசக்கர ரோந்து வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளிடம் தலைக்கவசம் அணியாவிட்டால் பெற்றோர்களுடன் வாகனத்தில் செல்ல கூடாது எனவும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வற்புறுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஆதரவுடன் அதிமுகவில் நுழைகிறாரா சசிகலா? - திருச்செந்தூரில் நடைபெற்ற திடீர் சந்திப்பின் பின்னணி!