சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை எதிரொலியாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து தென் மாவட்டம் மற்றும் சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகை கொண்டாட 1.40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்களின் மூலமாகச் சென்றனர்.
தற்போது கொண்டாட்டம் முடிந்து, மீண்டும் சென்னை திரும்புகின்றனர். ஏராளமான வாகனங்கள் சென்னையை நோக்கி தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால், சென்னையின் நுழைவு வாயில் பகுதியான தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு சிறப்புப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் சென்னைக்கு வருவதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலைகளில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து அலுவல் பணி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் நிலையில், ஒரே நேரத்தில் மக்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் பெருங்களத்தூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதிகப்படியான தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், ஆம்னி பேருந்துகள் அனைத்தையும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக கோயம்பேடுக்கு திருப்பிவிடும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்னி பேருந்துகள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி சென்று கோயம்பேடு செல்கின்றன. இதனால் திருவான்மியூர், அடையாறு, நீலாங்கரை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் வண்டலூரில் இறங்கி, மாற்று பேருந்துகள் மூலம் தாம்பரம் சென்று, அங்கிருந்து அவர்களின் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
இதன் காரணமாக வண்டலூர் பேருந்து நிலையத்தில் இறங்கும் பயணிகள், சென்னையின் உள்பகுதிக்குச் செல்ல மாநகர அரசுப் பேருந்துகள் குறைவாக இருப்பதாகவும், இதனால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வண்டலூர், தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள், பொத்தேரி பேருந்து நிலையத்தில் இறங்கி, புறநகர் மின்சார ரயில் மூலமாக சென்னை புறநகர் பகுதிகளுக்குச் செல்கின்றனர். இந்த நிலையில், வண்டலூரில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளுக்குச் செல்வதற்காக பேருந்துகள் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் தங்களது குழந்தைகளுடனும், உடமைகளுடனும் சாலையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிவதால், மக்கள் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மற்றும் மாநில அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, பொத்தேரி மற்றும் வண்டலூர் ரயில் நிலையத்தில் தென் மாவட்டத்திலிருந்து வரும் மக்கள் இறங்கி, புறநகர் மின்சார ரயில்கள் மூலமாக சென்னைக்கு செல்கின்றனர். இதனால் பயணச்சீட்டை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக ரயில் நிலையத்தில் அதிக அளவிலான பயணிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் காணாமல் போன குழந்தைகள் 20 நிமிடங்களில் கண்டுபிடிப்பு!