ஏழு வருடத்திற்கு முன்பு மெட்ரோ பணிகளுக்காக எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு பகுதிகளில் உள்ள அண்ணாசாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. தேவி திரையரங்கம் பகுதியில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் எக்ஸ்பிரஸ் அவின்யூ (Express Avenue) அருகேயுள்ள மணிக்கூண்டைச் சுற்றி வரும் நிலை இருந்தது.
இந்நிலையில் மெட்ரோ பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால் அண்ணாசாலை இன்று முதல் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெட்ரோ பணிகளால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதாலும், சாலை நடுவே தடுப்புகள் அமைக்கும் பணிகள் தாமதமாகி வருவதாலும், இருவழிப் பாதையாக மாற்றும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போதைக்கு இருவழிச் சாலையாக மாற்றும் பணி தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு அண்ணாசாலை இருவழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மிகவும் பரபரப்பான சாலையான அண்ணாசாலையில் அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்வதால் விரைவில் சாலைகளைச் சீர்செய்து இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.