சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (அக் 31) இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இவ்வாறு விடிய விடிய மழை பெய்து வருவதால், தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் வேலை மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், செம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளில், தாம்பரம் மாநகராட்சி அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மோர்பி தொங்கு பால விபத்துக்கு யார் காரணம்? - ஓர் பார்வை!