சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டின் வானிலை நிலை குறித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று இலங்கையில் நிலவிக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தற்போது நகர்ந்து குமரிக்கடல் பகுதியில் வலுவான காற்றழுத்தத் தாழ்வாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அக்டோபர் 31ஆம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் 7 செ.மீ. மழையும் மகாபலிபுரத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் வடக்கு மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தெற்கு கடற்பகுதிகள், குமரிக்கடல், மாலத்தீவுகள், தெற்கு கேரள பகுதி, லட்சத்தீவு பகுதிகளுக்கு அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம். சென்னை, அதன் புறநகரைப் பொறுத்தவரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனக் கூறினார்.
இதையும் படியுங்க:
'சுஜித் மீண்டும் வருவான்' - பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் புதுவித யோசனை!