சென்னையில் சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையைக் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் நோயாளிகளும் மருத்துவர்களும் மருத்துவமனை உள்ளேயும் வெளியேயும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னையை அடுத்து பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள வேல்ஸ் கல்லூரி வளாகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர் மழையால் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.
அதுமட்டுமின்றி அதற்கு அருகாமையில் உள்ள பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் இடத்தில் மழைநீர் சூழ்ந்ததால் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூழ்கின, அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை நகராட்சியில் இருந்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அனைவரும் ரேடியல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தகவலறிந்த பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மழைநீரில மூழ்கிய பேருந்துகளை கிரேன் மூலம் எடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.