சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு இரு சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியிருந்தோம். ஆனால், 27 மாதங்களாக கிடப்பில்போட்டுவிட்டு, தற்போது நிராகரித்துவிட்டதாக, உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் எப்படி சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறதோ, அதே அதிகாரம் சட்டமன்றத்திற்கும் இருக்கிறது. ஆனால், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, அரசியல் அமைப்பிற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆணி வேரையே சாய்க்கும் வகையில் செயல்பட்டுள்ள மத்திய பாஜக அரசை கண்டித்து ஒரு தீர்மானத்தையும், மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்கோரி ஒரு தீர்மானத்தையும் உடனடியாக இங்கே நிறைவேற்றுவதோடு, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, "மசோதாக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முன்கூட்டியே தமிழக அரசுக்கு, மத்திய அரசு தகவல் கொடுத்ததா... இல்லையா.. என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக வலியுறுத்திய அதே இரு தீர்மானங்களை நிறைவேற்றவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்," காங்கிரஸ் கட்சியால்தான் பிரச்னையே வந்தது. நீட் தேர்வுக்காக அறிவிக்கை வெளியிட்டதால்தான் வழக்கு தாக்கலாகி, தற்போது பிரச்னையாக மாறிவிட்டது. ஜெயலலிதா, நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, சாதகமான சூழல் வந்த நேரத்தில், அதற்கு எதிராக ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது காங்கிரஸ் கட்சிதான்", என்றார்.
மேலும் பேசிய அவர், "தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், செயலாளர்களை வலியுறுத்தி ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். ஆனால் மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் எந்த காலத்திலும் நீட் தேர்வுக்கு விலக்கு வராது என வாதாடி வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், காவிரி பிரச்னை உள்ளிட்ட அனைத்திற்கும் உறுதுணையாக இருந்த காங்கிரஸ் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இது போன்ற பிரச்னைகளை எழுப்பி வருகிறார்கள் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும்" என அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், "திமுக காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் நீட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதனை தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வில் நடத்தாமல் கடைசி வரை போராடியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அரசு நடக்க வேண்டியுள்ளதால் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், "கடந்த ஆண்டு மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வந்தது. ஆனால், நிறுத்தி வைத்ததை, நிராகரித்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். நிறுத்தி வைத்ததற்கான காரணம் என்னவென்று தமிழ்நாடு சட்டப்பேரவை திரும்பி கேள்வி கேட்டு கடிதம் எழுதியதற்கு இதுவரை பதில் இல்லை. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்துப் பேசி மீண்டும் கடிதம் எழுதி விளக்கம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "மத்திய அரசிற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற முடியாது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலேசானை நடத்தி, உச்ச நீதிமன்றத்திலோ அல்லது உயர் நீதிமன்றத்திலோ மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் எதிராக எதையும் செய்துவிடக் கூடாது’’ என்று தெரிவித்தார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீண்டும் குறுக்கிட்டு, "கண்டன தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்பதை நானும் அறிவேன். வலியுறுத்தியாவது தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும்" என்றார். அதற்கு, "நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் உள்ளன. எனவே, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.