தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், திமுக ஆட்சிக்காலத்தில் தனது காட்பாடி தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க முயற்சி செய்ததாகவும், வழக்கு தொடரப்பட்டதால் பணி நின்று விட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த பணி எப்போது தொடங்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து 37 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அதில் 15 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் விளையாட்டு அரங்கம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்தவுடன் கட்டுமான பணி தொடங்கும். அதன் பூஜைக்காக உங்களையும் அழைத்து செல்கிறோம்" என்றார்.
வேலூர் மாவட்டத்துக்கு விளையாட்டு அரங்கம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் பகுதியில் அறிவிக்கப்பட்டது என தெரிவத்த அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், அந்த இடத்தில் தான் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அணைக்கட்டுக்கு பதிலாக வேறு இடம் மாற்றப்பட்டதாகவும், உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று அணைக்கட்டு தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதேபோல் தங்கள் தொகுதியிலும் விளையாட்டு அரங்கங்க அமைக்க வேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் கேட்டதற்கு, நிதி பற்றாக்குறை காரணமாக ஆண்டுக்கு 5 முதல் 6 விளையாட்டு அரங்கங்கள் தான் அமைக்க முடியும் என்றும் வரும் காலத்தில் ஆய்வு செய்து அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கோட்டையன் பதிலளித்தார்.