சென்னை: ஒன்றரை வயதில் மாரடைப்பால் பாதிக்கப்பட பல்கேரியா நாட்டு குழந்தைக்கு, சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் இரத்தப்பிரிவு என்ற தடையை கடந்து, ABO-இணக்கமற்ற குழந்தைக்கான உறுப்பு மாற்று சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிகழ்த்தினர்.
உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு ஒன்றரை வயது குழந்தைக்கு கார்டியாக் அரெஸ்ட் நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காா்டியாக் அரெஸ்ட் பாதிப்பு நிகழ்ந்த ஒவ்வொரு முறையும் பச்சிளங் குழந்தைக்கு மருத்துவர் குழுவினர் மிக எச்சரிக்கையாக கையாண்டு இதய செயல்பாட்டை சீராக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ABO-இணக்கமற்ற குழந்தைக்கான உறுப்புமாற்று சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு உள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில், இதயத்தசை நோயின் காரணமாக கடைநிலை இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, மேல் சிகிச்சைக்காக பல்கேரியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டது.
சென்னைக்கு வரும் வழியில் கராச்சி அருகே விமானம் பறந்து கொண்டிருந்தபோது கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பு குழந்தைக்கு ஏற்பட்டது. சுமார் 40 நிமிடங்களுக்கு இதய மீட்சி சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்த குழந்தை, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. அப்போது மற்றுமொரு கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பு ஏற்படவே மார்பு அழுத்தங்களுடன் 45 நிமிட நேரத்திற்கு CPR சிகிச்சையை செய்தபிறகு இதய செயல்பாடு மீண்டும் தொடங்கியது.
இதனால் அறுவை சிகிச்சைக்கு உடனே கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் இதயத்திற்கு ஆதரவளிக்க (VA)-ECMO சாதனத்தோடு இணைக்கப்பட்டது. மார்பு திறந்திருந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 48 மணி நேரங்களுக்கு பிறகு வியக்கும் வகையில் இக்குழந்தை விழித்தெழுந்தது.
பலமுறைகள் கார்டியாக் அரெஸ்ட் பாதிப்புகள் ஏற்பட்டதற்கு பிறகு ஓரளவிற்கு நிலைமை சீராகவே ஒரு செயற்கை இதய பம்பை பொருத்தலாமா என்று மருத்துவர்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், மும்பையிலுள்ள வாடியா குழந்தைகள் மருத்துவமனையில் வேறொரு இரத்தப்பிரிவைச் சேர்ந்த 2 வயதே நிரம்பிய மூளைச்சாவடைந்த குழந்தையிடமிருந்து இதயம் தானமாக கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் தகவல் பெறப்பட்டது.
தானமாக கிடைக்கப்பெறும் இந்த உறுப்புக்கான பொருத்தமான நபர் யாரும் இந்தியாவில் இல்லாத காரணத்தால் பல்கேரியாவைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு அந்த இதயம் NOTTO அமைப்பால் பொருத்தப்படுவதற்கு ஒதுக்கப்பட்டது. மாறுபட்ட, இணக்கமற்ற இரத்தப்பிரிவைச் சேர்ந்ததாக இந்த இதயம் இருந்தபோதிலும், இந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நிலைமையின் காரணமாக இந்த இதயத்தை தானமாக பெற்று பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புதிய இதயம் இக்குழந்தைக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் பொருத்தப்பட்டது. முழுமையாக குணம்பெற்று இயல்புநிலைக்கு வருவதற்கு அறுவைசிகிச்சைக்கு பிறகு பல நாட்களுக்கு குழந்தைக்கு ECMO சாதனமும், மருத்துவ ஆதரவும் தேவைப்பட்டது. இதற்கிடையே ABO-இணக்கமற்ற இதயம் பொருத்தப்பட்டிருப்பதால் எழக்கூடிய சிக்கல்களை கையாள்வதற்கு நோயெதிர்ப்பு ஒடுக்கி செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
உறுப்புமாற்று சிகிச்சையில் புதிய, இணக்கமற்ற இரத்தப்பிரிவைச் சேர்ந்த இதயத்தைப் பெற்ற இக்குழந்தை இப்போது முழுமையாக குணமடைந்து நலமுடன் இருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று பிரிவு மற்றும் இயந்திர சுழற்சி முறை ஆதரவு பிரிவின் இயக்குநர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறும்போது, "ABO-இணக்கமற்ற உறுப்புமாற்று சிகிச்சைகளை குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு மட்டுமே செய்ய முடியும்.
அவர்களது நோயெதிர்ப்பு அமைப்பு வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதும் மற்றும் உறுப்பை நிராகரிக்கும் பதில் வினைக்கு மிகக் குறைவான வாய்ப்பே இருப்பதும், ABO-இணக்கமற்ற இதயத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது. தற்போது தானமளிப்பவர்களது எண்ணிக்கையை இது அதிகரிக்கிறது.
காத்திருப்பு நிலையில் நோயாளிகள் உயிரிழப்பு ஏற்படுவதை குறைக்கிறது. ஒரு வயதுவந்த நபருக்கு அவரது இரத்த வகையைச் சேராத ஒரு இதயம் பொருத்தப்படுமானால் உடல் அதை ஏற்காமல் உடனடியாக நிராகரித்துவிடும். ஆனால் இந்த குழந்தைக்கான சிகிச்சையில் பல தனித்துவமான அம்சங்கள் இருக்கின்றன.
மிகச்சிறிய குழந்தைக்குக் கூட இதயம் பாதிப்பிலிருந்து இதய செயல்பாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க ECMO-வின் பயன்பாடு, சரியாக சுருங்கி விரியாத, தானம் பெற்ற இதயம் சரியாக செயல்பட அனுமதிப்பதற்கு இத்தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் இரத்தப்பிரிவு தடைகளை கடந்து குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியும்" எனத் தெரிவித்தார்.