சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இன்று (ஏப். 27) சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கரோனா பரிசோதனை மையம், தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முழு ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் வேகம் குறைந்திருக்கிறது. அடுத்த சில நாள்களுக்குத் தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும். இதில் 2,000 படுக்கைகள் இந்த வாரம் முதல் செயல்படுத்தப்படும்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு 52 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுவருகிறது. தேவையானவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்க வேண்டும். படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும். சில இடங்களில் ஒரே வீட்டில் இருக்கும் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா நோயாளிகள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்.
கரோனா பாதிப்பில் சித்த மருத்துவம் நமக்கு கைகொடுத்திருக்கிறது. மீண்டும் முழு வீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும். ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் அறிவிப்பார்" என்றார்.