சென்னை: ஒன்றிய சுகாதாராத்துறை செயலாளரைச் சந்திப்பதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுபாடு குறித்து முதலமைச்சர், ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஒன்றிய சுகாதாரத்துறை அலுவலர்களைச் சந்தித்து, தடுப்பூசி கேட்பது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவு படுத்துவது, 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இந்தாண்டே தொடங்குவது, கருப்பு பூஞ்சை மருத்தை கூடுதலாக பெறுவது உள்ளிட்டவைகளைப் பற்றி பேசி வலியுறுத்தப்படும்.
புதிய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அனுமதி தந்ததும், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சருடன் மீண்டும் சென்று சந்திக்க உள்ளோம். மாணவர் சேர்க்கை குறித்து ஒன்றிய சுகாதார செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். தற்காலிகமாக, 250 மாணவர்கள் சேர்க்கை தொடங்குவது குறித்து முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மூலம் தெரிவிக்கப்படும். நீட் தேர்வு குறித்து அதிகாரிகள் குழு ஆராய்ந்து வருகிறது. உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மாதம் 71 லட்சம் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறும் போது தடுப்பூசி தட்டுப்பாடல் பணிகள் அப்படியே நின்று விடுகிறது. தடுப்பூசி சீராக வருவதற்கும் மக்கள் தொகை அடிப்படையில் அவை வழங்குவது குறித்து பேசப்படும்.
கட்டுபாட்டுகளுடன் கூடிய தளர்வுகள் என்பதை மக்கள் உணர வேண்டும். மெரினா கடற்கரையில் எந்தவித பாதுகாப்பின்றி மக்கள் செல்கின்றனர். எந்த மாதிரியான உருமாறிய கரோனா வந்தாலும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கை கழுவுவது போன்ற அடிப்படை நோய் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே கரோனா வராமல் தடுக்க முடியும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் தயாராக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்