சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுடன் வீடியோகால் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “மகப்பேறு மருத்துவமனைகளில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எழும்பூர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 400 கர்பிணிகள் அனுமதிக்கப்பட்டதில், 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
எழும்பூர் மருத்துவமனையில் 12 விழுக்காடு பிறந்த குழுந்தைகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இங்கு உயிரிழப்புகள் எதும் இல்லை. தமிழ்நாடு முழுவமும் ஆயிரத்து 606 கர்ப்பிணி பெண்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஆயிரத்து 104 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று இல்லாத கர்ப்பிணிகளுக்கு தனிப் படுக்கைகள், தனி வழி ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பிரசவத்திற்கு வருகைத் தருகின்றனர். இருபது வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு குறைந்த அளவிலேயே உள்ளது..
கரோனாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சித்தா, ஆயுர்வேதா போன்ற பிற சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக செயல்படுகிறது. முதியவர்களுக்கான பிசிஜி தடுப்பு மருந்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை அடிப்படையில் உள்ளது.
மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு உள் ஒதுக்கீடு வழங்கி, முதலமைச்சர் அறிக்கையை ஆளுநருக்கு அளித்துள்ளார்..
மாநிலத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் 150 இடங்கள் என, ஆயிரத்து 650 இடங்கள் இந்த ஆண்டு புதிதாக உள்ளன.
அந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.