கரோனாவால் உயிரிழந்தவர்களை அச்சம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மனிதநேயமற்ற இந்த செயலை தடுக்கும் வகையில் 1939ஆம் ஆண்டு தமிழ்நாடு சுகாதார சட்டத்தினை தமிழ்நாடு சட்டம் 111/1939 சட்டம் திருத்தம் செய்து 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரத் திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த மனித உடல் புதைத்தல் மற்றும் எரியூட்டல் செயலை தடுப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என இந்த புதிய திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி கரோனா நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து இடையூறு செய்தார்களேயானால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் படி அரசால் அறிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம், தகனம் செய்வதை தடுப்பதும் தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939, பிரிவு 74இன் படி அபராதம் உள்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.