சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தற்போதைய நிலை குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், காஞ்சிபுரம் பகுதியைச் சார்ந்த 45 வயது நபர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நேற்று டெல்லியிலிருந்து வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அவருடன் தொடர்புடைய பத்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கரோனா அறிகுறியுடைய 32 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் சிகிச்சைக் கட்டணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், தனியார் மருத்துவமனையில் கரோனா வைரசுக்கு சிகிச்சை வழங்க மத்திய அரசு தற்போது வரையிலும் அனுமதி வழங்கவில்லை என்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டால் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட அரசு நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் முழுக்க முழுக்க கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு மக்கள் பரிசோதிக்கப்பட்டுவருவதாகவும், மக்கள் யாரும் இந்தப் பெருந்தொற்று பாதிப்பு குறித்து அச்சப்படத்தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க தலைமைச் செயலர் தலைமையில் குழு!