சென்னை: சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, "கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
16 ஆயிரத்து 516 மருத்துவ முகாம்கள்: இந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் இன்று வரை 357 இடங்களில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். வட கிழக்கு பருவமழை காலத்தில் வரக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் 2 ஆயிரத்திற்கும் மேல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 16 ஆயிரத்து 516 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 இலட்சத்து 83 ஆயிரத்து 443 பேர் பயனடைந்து உள்ளனர். அதில் 2 ஆயிரத்து 958 பேருக்கு காய்ச்சலும், ஆயிரத்து 620 பேருக்கு சளி இருமலும் கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவனைகளிலும், மருத்துவ முகாம்களிலும் அனைத்து மழைக்கால சிகிச்சைகளுக்கான மருந்துகளும், சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையிலான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சோதனை: 7 தனியார் மருத்துவமனைகளின் சார்பில் இன்று (டிச.10) மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் மருத்துவ முகாம்களில் பரிசோதனைகளை செய்து பயனடைய வேண்டும். தமிழ்நாட்டில் ஜனவரியில் இருந்து தற்போது வரை 7 ஆயிரத்து 662 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதில் 10 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். டெங்கு பரவலை தடுக்க கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 250 முகாம்கள் நடப்பு நிதியாண்டில் நடத்த அறிவிக்கப்பட்டது.
அதில் ஆயிரத்து 83 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 10 இலட்சத்து 76 ஆயிரத்து 832 பேர் பயனடைந்து உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை (டிச.11) பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் உள்ளிட்டவை மாணவர்களுக்கு இருக்கிறதா என்பதை குறிக்கும் பரிசோதிக்கப்படும்.
ஜெயக்குமார் வெறும் கரண்டியை சுழற்றுபவர்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தங்களுக்கு மருத்துவ முகாம் வேண்டுமென்றால் ஏற்படுத்தி தரப்படும். நிவாண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், வெறும் கரண்டியை சுழற்றுவதற்கும், பாத்திரத்தில் கொழம்போ சோறோ வைத்துக்கொண்டு அகப்பையை வீசுவதற்கும் வேறுபாடு உண்டு. ஜெயக்குமார் வெறும் கரண்டியை சுழற்றுபவர்.
Man Made Flood: எனவே இது குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயக்குமாருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. 2015 வெள்ளத்தினை Man made flood என்று நாடாளுமன்றம் கூறியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக்கூறி தண்ணீரையை வடித்து இருக்கலாம். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு ஒரே நாளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர்” என்று கூறினார்.
ஆக்கிரமிப்புகள் உள்ளதெனில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: மேலும் பேசிய அவர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும். புயல் காரணமாக டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அதிக அளவில் மழை பெய்தது. அலையின் சீற்றத்தால் கடலில் தண்ணீர் உள்வாங்கவில்லை. மழை நின்றவுடன் மழைநீர் உள்வாங்கியது.
சென்னையில் மழைநீர் செல்லும் பதினாறு கால்வாய்களிலும் எங்கும் ஆக்கிரமிப்புகள் இல்லை. சென்னையில் எங்காவது ஆக்கிரமிப்புகள் உள்ளது என்று சொன்னால் கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.4,000 கோடிக்கான வெள்ளை அறிக்கை வேண்டும்.. அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்களின் அதிருப்தியான கேள்வி!