சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜூலை 06) செய்தி துறையினருக்கான தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, “ டெல்லியில் வரும் ஜூலை 9ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்திக்கும்போது, 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்தும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு, தடுப்பூசிகள் அதிக அளவில் வழங்குவது போன்ற திட்டங்கள் குறித்து வலியுறுத்தப்படும்” என தெரிவித்தார்.
கரோனா தடுப்பூசி:
மேலும் பேசிய அவர், “இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் தமிழ்நாட்டில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 300 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புள்ளது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே நோயின் தாக்கத்தை பொதுமக்கள் உணர்ந்து மருத்துவமனைக்கு சென்றால் உரிய சிகிச்சையளித்து உயிரிழப்புகளை தடுக்க முடியும். கருப்பு பூஞ்சை நோய்க்கு தடுப்பு மருந்துகள், அதற்கான தேவைகள் மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் தயார் நிலையில் உள்ளது.
கரோனா சிகிச்சைக்காக இதுவரை தமிழ்நாட்டில் 1 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் நேற்று (ஜூலை 05) வரையில் 1 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் 63 ஆயிரத்து 460 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
99 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவு செய்து தடுப்பூசிகள் வரவைக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனோ சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூல் செய்ததன் காரணமாக 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனோ சிகிச்சைக்கான அங்கீகாரம், அரசு காப்பீட்டுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - விரைவில் அறிவிப்பு?