சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும், ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் சார்பில் இன்று, சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நேரடியாகவும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்பட இருந்தது.
இந்த பயிற்சி கூட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்தார். அப்போது கூட்டம் தொடங்குவதற்கு முன்பே உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டு கோபத்துடன் வெளியேறினார். அமைச்சரின் இந்த நடவடிக்கையால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
பெயரளவில் 50 செவிலியர்களை மட்டுமே வரவழைத்து அதிகாரிகள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை என்று கூறி அமைச்சர் அதிகாரிகளிடம் கோபித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட பயிற்சிக்கூட்டம் விரைவில் மீண்டும் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!