சென்னை, பாரிஸ்சில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனையில் இன்று (மார்ச்.22) சுகாதாரத்துறை செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேருந்துகளில் அமர்ந்துள்ள பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என ஆய்வு மேற்கொண்டனர்.
அலுவலர்கள் வருவதைப் பார்த்ததும், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக முகக்கவசத்தை எடுத்து அணியத் தொடங்கினர். இந்நிலையில், முகக்கவசங்கள் இல்லாமல் சுற்றிய பயணிகளிடம் கரோனா குறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மாஸ்க் அணியாத பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களை மாநகராட்சி அலுவலர்கள், போக்குவரத்து அலுவலர்கள் அழைத்து பேசினர். அப்போது, "நீங்கள்தான் பயணிகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து சார்பில், பயணிகள் மற்றும் பேருந்து பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் நீங்களே முகக்கவசங்கள் அணியவில்லை. பிறகு எப்படி பயணிகள் அணிவார்கள்" எனக் கூறினர்.
இது குறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "எல்லோரும் முகக்கவசங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதனை அணியத் தவறுகின்றனர். இந்த நிலை மாறினால்தான், கரோனா தொற்றின் எண்ணிக்கை குறையும்" என்றனர்.
இதையும் படிங்க: கருணாநிதி பிறந்தநாளன்று ரூ.4,000 வழங்கப்படும்! - மு.க.ஸ்டாலின்