சென்னை: சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியானதையடுத்து, அதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகராட்சி அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
சென்னை கொளத்தூரை அடுத்த கொரட்டூரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதையடுத்து பள்ளி வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை மாணவர்கள் பிளாஸ்டிக் பக்கெட் கொண்டு தொட்டியின் மீது ஏறி சுத்தம் செய்யும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், தடுப்பு சுவர் இல்லாத மொட்டை மாடி மீது நின்றுகொண்டு மாணவர்கள் நீர்த்தொட்டில் மீது ஏறி சுத்தம் செய்கின்றனர். இது மட்டுமின்றி அந்த மாணவர்களின் தலைஉரசும் அளவிற்கு மின்கம்பி ஒன்று செல்கிறது.
இப்படி அச்சமில்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானது. தொடர்ந்து தலைமை ஆசிரியர்தான் அந்த மாணவர்களை சுத்தம் செய்ய சொன்னார் என்று மாணவர் ஒருவர் சொல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது மாநகராட்சி.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியான கொரட்டூர் பள்ளியில், மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைராலனது. இந்த வீடியோ மாநகராட்சியின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, மாணவர்களின் அந்த செயலுக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்று உள்ளார்.
அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து, அனைத்து மண்டல அதிகாரிகளிடமும், இது குறித்து அறிவுறித்தி உள்ளோம். தொடர்ந்து, அந்தந்த மண்டல பணியாளர்களை வைத்தே பள்ளியை சுத்தம் செய்ய வேண்டும்" என்று பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ!