கடலூர் பகுதி அதிமுக நிர்வாகி சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், கடலூர் மாவட்டம் துரைப்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு தேர்தல் பணி தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது, பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா, அவருடைய கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களுடைய அடியாட்களை வைத்து, தன் மீதும் தன் நண்பர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இது தாக்குதல் தொடர்பாக கடலூர் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அரசியல் செல்வாக்கின் காரணமாக அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்னர் கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவால், இந்த வழக்கில் புகார் (சி.எஸ்.ஆர்) ஏற்கப்பட்டதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. சத்யா மற்றும் அவருடைய கணவர் மீது அளிக்கப்பட்ட இந்தப் புகாரை திரும்பப் பெற காவல் ஆய்வாளர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். எனவே, இனி விசாரணை நியாயமாக நடக்காது என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா, அவருடைய கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கடலூர் புதுப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டனர்.