தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி முத்தரை பதித்தவர் நடிகை அமலாபால், சமீபத்தில் வெளியான 'ஆடை' என்ற படத்தில் உடையில்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தவர். திரைத் துறையில் தனக்கு பழக்கமான இயக்குநர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது. அமலாபாலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங் சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார்.
இதையடுத்து, நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங், தன்னுடன் எடுத்த புகைப்படங்களை தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், அவர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.