சென்னை: 1990 க்கு பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிமுக பாடல்களில் ஒலித்த குரல் என்றால், அது ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியன் என்னும் எஸ்.பி.பியின் குரலாகத் தான் இருக்கும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய எஸ்பிபி, கிட்டத்தட்ட 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
‘ஆயிரம் நிலவே வா..’ தொடங்கி ‘அண்ணாத்த’ வரையிலும் அவரது குரலுக்கு தலைமுறை கடந்த ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும், 60களில் தொடங்கிய இவரது திரைப்பட பாடலின் பயணத்தில், எம்.எஸ்.வி. முதல் அனிருத் வரையிலான இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடியுள்ளார்.
காலம் தாண்டிய இசையமைப்பாளர்களோடு... தேனிசை தென்றல் தேவாவின் இசையில், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘தண்ணி குடமெடுத்து...’ என்ற பாடலை அந்த காலக்கட்ட இளசுகளின் காதல் காவியமாக உருவெடுக்க வைத்தவர், எஸ்.பி.பி. அதேபோல் ஏஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் எஸ்.பி.பி பாடிய ‘காதல் ரோஜாவே...’ என்னும் பாடல், இன்று வரை ஆகச்சிறந்த காதல் பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. 80களில் இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
குறிப்பாக ‘சகலகலா வல்லவன்’ படத்தில் எஸ்பிபி பாடிய ‘இளமை இதோ இதோ..’ என்ற பாடல்தான் தற்போது வரையிலும் புத்தாண்டு பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்படியே 1990-களுக்குள்ளே நுழைந்தால் தேவா தொடங்கி ஏஆர்.ரகுமான், எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, வித்யாசாகர், பரத்வாஜ், பரணி, சவுந்தர்யன் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுக்கும் மறக்க முடியாத ஏராளமான வெற்றிப் பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் படமான ‘அரவிந்தன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஈரநிலா’ என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து கார்த்திக் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், டி.இமான், விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ், அனிருத், ஶ்ரீகாந்த்தேவா உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
கின்னஸ் சாதனையாளர் எஸ்பிபி: தான் பாடிய காலம் வரையிலும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், ரஜினியின் அறிமுகப்பாடல் எப்போதுமே எஸ்பிபிதான் என்றளவு மாறிவிட்டது. ரசிகர்களும் அதையேத்தான் விரும்பினர். ‘வந்தேன்டா பால்காரன்.., ஒருவன் ஒருவன் முதலாளி.., தேவுடா தேவுடா.., என்பேரு படையப்பா.., நான் ஆட்டோக்காரன்.., மரணம் மாஸ் மரணம்.., அண்ணாத்த..’ என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த பாடல்களில் எல்லாம் ஒருவித குறும்பும் எஸ்பிபி குரல்வளையோடு தவழும். கேட்கின்ற நமக்கும் அதுவொரு அலாதி இன்பத்தை ஏற்படுத்தும். காதல், நட்பு, சோகம், மகிழ்ச்சி என அத்தனை உணர்வுகளையும் தனது குரலால் நம்முள் கடத்தியவர் இந்த மந்திரவித்தைக்காரர் எஸ்பிபி.
மேலும், உலகில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ள இவர். ஒரே நாளில் அதிகபட்ச (21 பாடல்கள்) பாடல்களை பாடியவர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளவர். பின்னணி பாடகர் என்பதை தாண்டி இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் தனி முத்திரை பதித்தார்.
நடிப்பில் சுட்டிக்குழந்தை எஸ்பிபி: 1991ல் இவர் இசையமைத்து நடித்து வெளியான படம் சிகரம். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு.. தகரம் இப்போ தங்கம் ஆச்சு.., இதோ இதோ என் பல்லவி.., வண்ணம் கொண்ட வெண்ணிலவே..’ ஆகிய பாடல்கள் காலத்திற்கும் அழியாதவை. அதேபோல் காதலன் படத்தில் பிரபுதேவாவின் தந்தையாக கலகலப்பான வேடத்தில் நடித்தும் அசத்தினார். அதுபோக சின்னத்திரையிலும் தனது நடிப்பை தொடர்ந்தார், எஸ்பிபி.
‘கேளடி கண்மணி’ படத்தில் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதல் இன்றி..’ என்ற பாடலை கேட்டால். இப்போதும் நமக்கு மூச்சு முட்டத்தான் செய்கிறது. அவ்வை சண்முகி, ரட்சகன், காதல் தேசம், பிரியமானவளே உள்ளிட்ட ஏராளமான படங்களில் தற்போதுள்ள முண்ணனி நட்சத்திரங்களோடு குணச்சித்திர வேடங்களில் கலக்கியிருப்பார், எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
மேலும், மிமிக்ரி செய்வதில் சிறந்தவரான எஸ்பிபி, டப்பிங் துறையிலும் சிறந்து விளங்கினார். அதிலும் டோலிவுட்டில் கமல்ஹாசன் பிரபலமடைய எஸ்.பி.பி மிக முக்கியமான காரணம் என்றே கூறலாம். ‘தசாவதாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் கமல்ஹாசனின் ஏழு கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி தான்.
விருதுகளின் விருந்தாளர்: இயக்குனர் அட்டர் பர்க்கின் ‘காந்தி’ திரைப்படத்தின் தெலுங்கு மொழி படத்தில் காந்தி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து டப்பிங்கில் தன் தனித்துவத்தை நிரூபித்தார். பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ள எஸ்பிபி எப்போதும் தன்னையும் தனது குரலையும் இளமையாக வைத்துக்கொண்டவர். ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் எஸ்பிபி.
அதில், தமிழில் முதல்முறையாக மின்சாரக் கனவு படத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் பாடிய, ‘தங்கத் தாமரை மகளே..’ என்ற பாடலுக்காகத்தான் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திய மென்மைக்குரலோன் எஸ்.பி.பியின் தனிக்குரல், மக்களின் குரலாய் அவர்களது மனதில் இன்றளவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இசைத்துக்கொண்டு தான் இருக்கும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: எஸ்.பி.பி பாடிய கடைசிப் பாடல் 'விஸ்வரூப தரிசனம்' சிம்போனியில் வெளியீடு!