சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குலம் பகுதியைச் சேர்ந்தவர், ஹரி நாடார். பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஹரி நாடார் மீது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட்ரமணியிடம் தொழில் வளர்ச்சிக்காக 360 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி, 7 கோடி ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில், பெங்களூரு சிட்டி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு, மே மாதம், ஹரி நாடாரை கைது செய்து கர்நாடக சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் ஒரு மோசடி வழக்கில் ஹரி நாடாரை இன்று கைது செய்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜீன் மாதம் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பஷீர் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அதில் 2020ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, தொழிலில் நஷ்டம் அடைந்ததாகவும், அதனை சரி செய்ய வங்கியில் 100 கோடி ரூபாய் கடன்பெற முயற்சித்து கொண்டிருந்தபோது பனங்காட்டுப் படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 1.5 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்துபணத்தை மீட்டுத் தருமாறு குறிப்பிட்டிருந்தார்.
இவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி பிரிவு போலீசார் ஹரி நாடார் மீது மோசடி, உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஏற்கனவே ஹரி நாடார் மோசடி மற்றும் நடிகை விஜயலட்சுமி தந்த புகாரில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் கைது ஆணையை முறையாக காண்பித்து, அவரை கைது செய்து சென்னை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் திருமாவளவன் புகார்