ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும், சோகத்தை மறந்து புன்னகையில் ஆழ்த்துவதிலும் குழந்தைகள் பெரும் பங்கு வகித்துவருகின்றன. குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் குழந்தைகள் தினம். குழந்தைகள் நம் நாட்டின் பலம், சமூகத்தின் எதிர்காலம்.
இந்தக் குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் நாள் பன்னாட்டு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
பிரதமராக நேரு இருந்தபோது, குழந்தைகளின் நலம், கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். பணியில் இருக்கும் சமயத்தில்கூட குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவரை குழந்தைகள் நேரு மாமா என்று அன்போடு அழைப்பார்கள்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படைக் கல்வி பெற்று முழுப் பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.