தமிழ்நாட்டில் 2019- 2020ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவால் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் நீட் தேர்வு எழுதி சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்களில் மாற்றம் உள்ளதாக கருதப்படுகிறது. சில மாணவர்கள் முறைகேடாக நீட் தேர்வினை ஒரே முகவரி, பெயரில் எழுதியுள்ளதாக சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை தேசிய தேர்வு முகமைக்கு தமிழ்நாடு அரசு அளித்தது. இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ள சுமார் 7,000 மாணவர்களின் புகைப்படம், கைரேகையுடன் கூடிய பட்டியலை தேசிய தேர்வு முகமை மருத்துவக் கல்வி இயக்குனரகம் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்து படித்துவரும் மாணவர்களின் கைரேகையை ஏற்கனவே மருத்துவ கல்வி இயக்குனரகம் பெற்று வைத்துள்ளது. இதனையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையால் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விபரம் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மருத்துவக்கல்லூரியில் இருந்த 5400 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 580 இடங்கள் தவிர 4,820 இடங்களும்,19 பல் மருத்துவ கல்லூரியில் 2,913 இடங்களும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட்டது.
இந்நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய சோதனையில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பயின்ற இம்ரான் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் தற்பொழுது 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இதையும் படிங்க: 'பருந்து கூட்டில் வளரும் காக்கைகள்' அதிர்ச்சியளிக்கும் கல்வி மோசடி! - ஈடிவி பாரத்தின் சிறப்புக் கட்டுரை