பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒன்றின் மீது தீராக் காதல் இருந்தே தீரும். சிலருக்கு புத்தகமாக இருக்கலாம், சிலருக்கு ஆடையாக இருக்கலாம். இப்படியிருக்க, சிலரின் காதல் நம்மால் நம்பவே முடியாத அளவுக்கு விசித்திரமாக இருக்கும். அதில் ஒன்றுதான் பெண்களின் கூந்தலின் மீது 'ஆண்கள்' சிலருக்கு வரும் காதல்.
சங்க காலத்தில் பெண்களின் கூந்தலை 'கார்குழல்' (கருமையான கூந்தல்) என்ற உவமையைக் கொண்டு வர்ணிக்காத புலவர்களே இல்லை எனலாம். அதன் தொடர்ச்சியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சம காலத்திலும், கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பெண்களை வர்ணித்து எழுதும் கவிதைகளில், கூந்தலை வர்ணிக்காமல் அக்கவிதை முழுமைப் பெறாது. பல நூற்றாண்டுகளாக ஆண்களுக்கும் பெண்களின் கூந்தலுக்கும் உள்ள பந்தம் அக்கூந்தலைப் போலவே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது.
பெண்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை. அவர்களுக்கும் கூந்தல்தான் எல்லாமே. தன் சக தோழியின் கூந்தல் ஒரு இன்ச் அதிகமானாலும் அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அந்தளவிற்கு கூந்தல் காதல் கொண்டவர்கள் பெண்கள். 'திருப்பாச்சி' படத்தில் விஜய்யின் தங்கை தன் கூந்தலை விட தோழியின் கூந்தல் நீளம் அதிகமாக இருப்பதாக சொல்லும்போது, தன் அண்ணன் விஜய்யிடம் கூறி அவளுக்குத் தெரியாமல் வெட்டச் சொல்வாள். ஆனால், விஜய்யோ அவள் தோழியின் அம்மாவின் கூந்தலை வெட்டிவிடுவார் என்பது ஒரு 'முடி'விலா கதை.
கார்குழல் காதலால் நேர்ந்த விபரீதம்:
இப்படிப்பட்ட ஒரு 'கார் குழல்' கொண்ட மணப்பெண்ணுக்கும், முன் கூறியது போல கூந்தல் காதலன் ஒருவருக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைத் தான் நாம் பார்க்கப் போகிறோம். இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்யப்போகும் மணப்பெண் ஒருவர், தன் சகப்பயணிகளுடன் சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். ஆட்டோ பூவிருந்தவல்லியிலுள்ள என்.எஸ்.கே. நகர் சந்திப்பை நெருங்கும்போது, அப்பெண்ணின் கூந்தல் எதிலோ சிக்கியது போல் உணர்ந்திருக்கிறார். உடனே, தன் கூந்தலை வருட முற்பட்டார்.
ஆனால், அவர் கையில் கூந்தல் அகப்படவில்லை. குழப்பமடைந்த அவர் மீண்டும் கூந்தல் எங்காவது சிக்கியுள்ளதா திரும்பிப் பார்த்தபோது, கூந்தல் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அலறினார். பதற்றமடைந்த ஆட்டோ ஓட்டுநரும் சகப் பயணிகளும் அப்பெண்ணிடம் விசாரிக்கவே, தன்னுடைய கூந்தலைக் காணவில்லை என அழுதுகொண்டே கூறியுள்ளார். அவர் அலறலைக் கேட்ட சகப் பயணி ஒருவர் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து குதித்து ஓடினார். இதையடுத்து பயணிகள் சிலர் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பிடித்து அவரது பையை சோதனை செய்ததில், அப்பெண்ணின் கூந்தலும் கத்தரிக்கோலும் இருந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். அந்த நபரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில், அந்த நபர் கார்த்திக் (35) என்றும், பெண்களின் கூந்தல் மீது அதீத காதல் (Hair Fetish) கொண்ட நபர் என்பதால் அதை வெட்டியதும் தெரியவந்தது. மேலும் அவர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார் என்றும் அறியப்படுகிறது.
இன்னும் திருமணம் ஆக சில தினங்களே உள்ளதால் அப்பெண் தன் வருங்கால கணவரின் ஆலோசனைப்படி, முடியை வெட்டிய நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல் துறையினரிடம் கூறியுள்ளார். இந்தச் செயலை செய்ததற்கு எந்தப் பின்புலனும் இல்லாததாலும் அப்பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்கவும் வழக்குப் பதியாத காவல் துறையினர் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர்.
திரைப்படங்களில் நாம் பார்த்த காட்சிகள் நம் கண் முன்னே அரங்கேறும்போது, நம்மால் ஆச்சர்யமடையாமல் இருக்க 'முடி'யவில்லை.
இதையும் படிங்க: முதன்முறையாக உயிரைக் காப்பாற்றிய செல்ஃபி - கேரளாவில் சுவாரஸ்யம்!